
நேற்றிரவு சுமார் 7 மணியிருக்கும். நடிகர் சங்க வளாகத்தில் விருட்டென்று வந்து நின்றது விஜய்யின் கார். உள்ளேயிருந்து இறங்கியது சாட்சாத் அவரேதான்! அடுத்தடுத்த சில நிமிடங்களில் துவங்கியது அந்த காரசாரமான விவாதம். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.பொதுவாக இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளை அப்பா முடிவுக்கு விட்டுவிட்டு ஹாயாக படத்தில் நடிக்கப் போய்விடும் விஜய், நேரடியாக பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்கிறார்கள் சிலர். ‘விஜய்க்கு ஒரு பிரச்சனைன்னா அதை பார்த்துகிட்டு சும்மாயிருக்க முடியாது. என்ன பிரச்சனை? சொல்லுங்க. அவரையே வரச்சொல்லி பேசுவோம்’ என்றாராம் சரத்குமார். இதையடுத்துதான் இந்த சந்திப்பு. ‘நான் என்ன செய்யணும் சொல்லுங்க’ என்று கேட்ட விஜய், திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக பன்னீர்செல்வம் சொன்ன சில கருத்துகளை மறுத்தும், ஆமோதித்தும் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் பேச்சு வார்த்தையில் முன்னேற்றத்தின் அளவு நினைத்த மாதிரி இல்லை என்றதும் பன்னீர் செல்வமும் அவருடன் சென்றிருந்த மற்றொரு நிர்வாகி ஸ்ரீதரும் அங்கிருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
பிறகு தனது முடிவிலிருந்து சற்று இறங்கி வந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியிருப்பதாக கூறுகிறார்கள். அது என்ன என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரலாம்.
No comments:
Post a Comment